நெல்லை-தென்காசி-பணகுடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நெல்லை-தென்காசி-பணகுடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 6:57 PM GMT)

மத்திய அரசை கண்டித்து நெல்லை, தென்காசி மற்றும் பணகுடியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை,

மத்திய அரசை கண்டித்து நெல்லை, தென்காசி மற்றும் பணகுடியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நெல்லை

இதனால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடல் முன்பு உள்ள ஒரு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு முன்னிலை வகித்தார்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கோஷங்கள்

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கு இருந்த நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தென்காசி-பணகுடி

இதேபோன்று மத்திய அரசை கண்டித்து நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தென்காசி ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமை தாங்கினார். இதில் காங்கிரசார் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் பணகுடி காவல்கிணறு காமராஜர் சிலை அருகில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வள்ளியூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சுயம்பு லிங்கதுரை, காவல்கிணறு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story