கண்தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்


கண்தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 7:11 PM GMT)

கண்தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.

நெல்லை, 

கண்தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.

பாராட்டு விழா

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கண்தானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு, கண்தானம் செய்தவர்களை கவுரவித்து சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கருவிழியில் காயம் ஏற்படுத்துதல், கிருமிகளால் தொற்று நோய் ஏற்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வைட்டமின் ‘ஏ‘ குறைபாடால் கருவிழி பாதிப்பு ஏற்படுகிறது. சிலர் கருவிழி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். அதன்பிறகும் நோய் தொடர்கிறது. இதனால் அவர்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

அனைவருக்கும் பார்வை

இறப்பவர்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வருவது இல்லை. ஒரு வருடத்தில் இறப்பவர்கள் அனைவரும் கண்தானம் செய்தால், கருவிழி பாதிப்பால் பார்வை குறைபாடு உள்ளவர்கள் அனைவருக்கும் பார்வை கிடைக்கும்.

ஒருவர் இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்து 6 மணி நேரத்துக்குள் கண்கள் தானமாக பெறப்பட வேண்டும். கண்தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். கண்தானம் மூலம் பார்வை குறைபாடு தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் ரேவதிபாலன், பேராசிரியர்கள் ராஜலட்சுமி, ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story