கடலூர் முதுநகரில்: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை அதிகாரி கைது


கடலூர் முதுநகரில்: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை அதிகாரி கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 3:30 AM IST (Updated: 10 Nov 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் படகு உரிமம் பெயர் மாற்றம் மற்றும் டீசல் மானியம் பெறுவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர், 


பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் ஆசிப் (வயது 46). இவர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த துளசிநாதன் என்பவரிடம் பழைய விசைப்படகு ஒன்றை ரூ.11 லட்சத்து 40 ஆயிரத்துக்கு வாங்கினார்.

இந்த படகின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்வதற்காகவும், டீசல் மானியம் பெறுவதற்காகவும் கடலூர் முதுநகரில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆசிப் விண்ணப்பித்தார். இதற்கு மீன்வளத்துறை ஆய்வாளர் மனுநீதிசோழன்(50) ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிப், இது குறித்து கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின்ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

லஞ்சம் கேட்ட மீன்வளத்துறை ஆய்வாளரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். போலீசார் கூறிய அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் ஆசிப் நேற்று மதியம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கே இருந்த மீன்வளத்துறை ஆய்வாளர் மனு நீதிசோழனிடம் பணத்தை கொடுத்தபோது, அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தி, அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மனுநீதி சோழனை கைது செய்து, கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story