பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயார் என பேட்டி
பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.
சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசிகலா 2 முறை பரோலில் தமிழ்நாட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இளவரசி முதல் முறையாக கடந்த 25-ந் தேதி 15 நாட்கள் பரோலில் சென்றார். அவர் பரோல் காலம் முடிந்து நேற்று முன்தினம் பெங்களூரு சிறைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். அவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முத்தையா, சுந்தரராஜன், ஜெயந்தி, பத்மநாபன் உள்பட 12 பேர் சென்றனர். பகல் 12.15 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர்கள் 2.10 மணியளவில் வெளியே வந்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இடைத்தேர்தலை சந்திக்க...
தீபாவளி பண்டிகையையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினேன். எங்களிடையே குழப்பம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது தவறானது. எங்களிடையே எந்த குழப்பமும் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மேல்முறையீடு வேண்டாம், மக்களை சந்திப்பது என்று முடிவு எடுத்தோம். அந்த முடிவை சசிகலாவிடம் தெரிவித்தோம். இது சரியான முடிவு தான் என்று அவர் சொன்னார். இந்த விஷயத்தில் தேர்தலை சந்திக்குமாறு கூறி ஏராளமான கடிதங்கள் வந்ததாக சசிகலா கூறினார்.
அதன்படி நாங்கள் ஒருமித்த முடிவுடன் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். சர்கார் பட விஷயத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. பிரச்சினை செய்வது தேவையற்றது. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான உதவியை செய்யாமல், சர்கார் படத்திற்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். இது சரியல்ல.
ஏன் போராடவில்லை?
ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தூக்கி போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இலவச தொலைக்காட்சியையும் போட்டு எரிப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. படத்தில் ஒருதலைபட்சமாக காண்பிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்.
ஆளுங்கட்சியினர் அந்த படத்திற்கு தேவையற்ற விளம்பரத்தை தேடித் தருகின்றனர். தற்போது போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது, ஏன் போராடவில்லை?. நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதை மறைக்கும் பொருட்டு காழ்ப்புணர்ச்சியுடன் அ.தி.மு.க.வினர் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. இருக்கும் கூட்டணியில்...
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். தி.மு.க. இருக்கும் எந்த கூட்டணியிலும் எங்கள் கட்சி இடம் பெறாது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாமல் அ.தி.மு.க.வினர் தடுத்துவிட்டனர். இப்போது 20 தொகுகளுக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து வேகமாக செயல்படுவது போல் காட்டிக் கொள்கிறார்கள்.
எங்களை பொறுத்தவரையில் நாங்கள் ஏற்கனவே தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து, இடைத்தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். தேவர் மகன் படத்தில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் எந்த காட்சியும் இடம் பெறவில்லை. அது நல்ல படம்.
கமல்ஹாசன் நடிகராக...
அந்த படத்தின் 2-வது பாகம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் நடித்தபோது கமல்ஹாசன் நடிகராக மட்டும் இருந்தார். இப்போது அவர் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அவர் அதனை மனதில் வைத்து இந்த படத்தின் 2-வது பாகத்தை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
Related Tags :
Next Story