பெண்ணாடம் அருகே: சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


பெண்ணாடம் அருகே: சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:15 PM GMT (Updated: 9 Nov 2018 8:55 PM GMT)

பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட நந்திமங்கலம் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சாலை வசதி, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட எந்தவொரு வசதியையும் முறையாக செய்து கொடுக்கவில்லை.இப்பகுதியில் தார் சாலை அமைக்கப்படாததால் கிராம மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந்தனர். அந்த மண் சாலையும் முறையான பராமரிப்பின்றி மேடு பள்ளமாக, சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க கோரி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அந்த மண் சாலை மிகவும் சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறியது. இதனால் அந்த வழியாக கிராம மக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று காலை அப்பகுதி மக்கள் சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையை சீரமைக்க உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், கிராம மக்கள் சிறிது நேரத்தில் தாங்களாகவே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story