ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:15 PM GMT (Updated: 9 Nov 2018 9:45 PM GMT)

ராமநாதபுரத்தில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த தினத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் கருப்பு தினமாக அனுசரித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் அறிவித்தனர்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதில் பங்கேற்ற மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் கூறியதாவது:– பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாள் இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களை வங்கி முன்பு நடுத்தெருவில் வரிசையில் நிற்க வைத்து விட்டார். இந்த கருப்பு தினத்தை ஒவ்வொரு இந்திய மக்களும் எந்நாளும் மறக்க மாட்டார்கள். இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிவை சந்தித்துள்ளது. ஏராளமான சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டனர்.

இவற்றைப்பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி வெளிநாடு வாழ் இந்திய பிரதமராக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதில் இந்திய மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வருகின்றனர். 2019–ல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வருவார்.

இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், ஆரோக்கியசாமி, கிருஷ்ணராஜ், நகர் தலைவர்கள் ராமேசுவரம் ராஜாமணி, பரமக்குடி அப்துல் அஜீஸ், மாவட்ட துணை தலைவர் முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் அகமது கபீர், ஊடக பிரிவு செயலாளர் காஜா நஜ்முதீன், வட்டார தலைவர்கள் கோபால், திருப்புல்லாணி சேதுபாண்டியன், ராமர், போத்தி, விஜயரூபன், அருள், செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், பழனிக்குமார், மண்டபம் சுகர்னோ, காருகுடி சேகர், மகிளா காங்கிரஸ் பெமிலா விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.


Next Story