கார் மோதி சிறுமி பரிதாப சாவு; தந்தை,தாய் படுகாயம்
ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் நடந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அவருடைய தந்தை,தாய் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம்,
உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி மகன் கவுரிசங்கர்(வயது 24). ராமநாதபுரம் அருகே நாரையூரணி பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி எக்சிபா(23). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் மகள் ஜெசிகாஸ்ரீ (2). இந்த நிலையில் கவு ரிசங்கரின் பெரியம்மா மகனுக்கு ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்ததாம்.
இதற்காக கவுரிசங்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் மொபட்டில் நேற்று முன் தினம் இரவு ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்துள்ளது. இதனால் மழைக்காக ஒதுங்க இடம் பார்த்துகொண்டே வந்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே வழுதூர் விலக்கு ரோடு பகுதியில் மறுபகுதியில் நிழற்குடை இருந்ததை கண்ட கவுரிசங்கர் அங்கு சென்று நின்று விட்டு மழைவிட்டதும் செல் லலாம் என்று மொபட்டில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது மதுரையில் இருந்து பனைக்குளம் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த சிறுமி ஜெசிகாஸ்ரீ ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தாய், தந்தை இருவரும் சிறிய காயத்துடன் உயிர்தப்பினர்.
விபத்தில் மகள் உயிரிழந்ததை கண்டு தாயும், தந்தையும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் பனைக்குளத்தை சேர்ந்த மெகராஜ் மகன் முகமது கவித் கமால்(23) என்பவர் மீது கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.