தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்த வாலிபர் அடித்து கொலை 4 பேர் கைது
உல்லாஸ்நகரில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடித்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
உல்லாஸ்நகரில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடித்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு வெடித்தார்
தானே மாவட்டம், உல்லாஸ்நகர் அசோக் சாம்நாட்நகரை சேர்ந்தவர் நவீன் (வயது25). நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தார். தெருவில் பட்டாசுகளை வைத்து வெடித்தார்.
அப்போது அந்த தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் குஷல் நிக்கம் என்பவர் வந்துகொண்டிருந்தார். பட்டாசு வெடித்ததில் பறந்த தீப்பொறி அவர் மீது பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த குஷல் நிக்கம் அவரிடம் சண்டை போட்டார். பின்னர் அங்கிருந்து கோபத்துடன் சென்று விட்டார்.
4 பேர் கைது
இதையடுத்து சிறிது நேரத்தில் குஷல் நிக்கம் நண்பர்கள் சிலருடன் அங்கு வந்தார். அவர்கள் நவீனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பலினர் அங்கிருந்து ஓடி விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் செய்தனர். திடீரென அவர்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பதற்றம் உண்டானது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குஷல் நிக்கம் மற்றும் அவரது நண்பர்கள் ராகுல் போஸ்லே, பிரதீப் ஜாதவ், ஜக்திஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story