66 மையங்களில் நாளை குரூப்-2 தேர்வு - 17 ஆயிரத்து 346 பேர் எழுதுகின்றனர்


66 மையங்களில் நாளை குரூப்-2 தேர்வு - 17 ஆயிரத்து 346 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 12:26 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 66 மையங்களில் நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வை 17 ஆயிரத்து 346 பேர் எழுதுகின்றனர்.

திண்டுக்கல், 

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-2 பணிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற் காக மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. திண்டுக்கல்லில் 48 மையங்களும், பழனியில் 18 மையங்களும் உள்ளன.

இதில் திண்டுக்கல்லில் 12 ஆயிரத்து 640 பேரும், பழனியில் 4 ஆயிரத்து 706 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 346 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு முழுவதும் வீடியோகேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக 44 வீடியோகிராபர்களும், தேர்வை நடத்துவதற்கு 66 ஆய்வு அலுவலர்களும், 66 முதன்மை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 9 பறக்கும் படைகளும், 12 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கி, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது தேர்வர்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். ஹால்டிக்கெட், பேனா மற்றும் எழுது பொருட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். செல்போன், புளுடூத் போன்றவற்றை அனுமதிக்க கூடாது. அதேபோல் தேர்வர்கள் எளிதாக மையங்களுக்கு வந்து செல்வதற்கு பஸ்கள் இயக்க வேண்டும். தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், என்று அறிவுறுத்தினார்.

மேலும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, தேர்வு மையங்கள் தொடர்பான சந்தேகங்களை 0451-2460081 என்ற தொலைபேசி எண்ணில், தேர்வர்கள் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், டி.என்.பி.எஸ்.சி. அலுவலர்கள் ராமமூர்த்தி, ராஜா, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story