இருமலை குணமாக்குவதாக கூறி வாலிபரின் உள்நாக்கை அறுத்த போலி வைத்தியர் கைது
இருமலை குணமாக்குவதாக கூறி வாலிபரின் உள்நாக்கை அறுத்த போலி வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் பாலமுருகன் (வயது 19). இவர் 10–ம் வகுப்பு வரை படித்துவிட்டு நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருமல் மற்றும் சளித்தொல்லை ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள நாட்டு வைத்தியரான நாராயணன் (65) என்பவரிடம் காட்டி வைத்தியம் பார்த்தார். அதன்பின்னர் பாலமுருகனின் வாயில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் பாலமுருகனுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது தொண்டையின் உள்ளே இருந்து ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விசாரித்த போது இருமலுக்காக நாராயணனிடம் வைத்தியம் பார்த்ததையும், அதில் இருந்து தனது வாயில் ரத்தம் வருவதையும் பாலமுருகன் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், பாலமுருகனை பரிசோதித்தனர். அப்போது அவரது உள்நாக்கு அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனுக்கு வைத்தியம் பார்த்த நாராயணனிடம் (65) விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு வருபவர்களிடம் நோயை குணமாக்குகிறேன் எனக்கூறி அவர்களின் உள்நாக்கை நாராயணன் அறுப்பது தெரியவந்தது. அவ்வாறே பாலமுருகனின் உள்நாக்கையும் அவர் அறுத்து உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலி வைத்தியர் நாராயணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.