சர்கார் பட விவகாரம்: அதிகாரத்தை வைத்து அடக்க நினைப்பது ஏற்புடையதல்ல - ஜி.கே.வாசன்
சர்கார் பட விவகாரத்தில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அடக்க நினைப்பது ஏற்புடையதல்ல என்று ஜி.கே.வாசன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியாவில் தொழில் ரீதியாக அதிக கஷ்ட, நஷ்டம் ஏற்பட்டு வரும் தொழில் பட்டாசு தொழில். சீன பட்டாசுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது. தமிழகத்தில் அரசு நிர்ணயித்த நேரத்தைவிட, தீபாவளி அன்று அதிக நேரம் பட்டாசு வெடித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட சுற்றுச்சூழல் மாசு குறைவு. வருங்காலத்தில் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
சர்கார் திரைப்படத்தை பொறுத்தவரை நல்ல கருத்துகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை மூலமோ, சட்ட ரீதியாகவோ தீர்த்துக் கொள்ள வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அடக்க நினைப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறிதான். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் குறித்து முறையாக அறிவித்தால் த.மா.கா. அதன் பின் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.
தேசிய அளவில் சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார். மதச்சார்பின்மை இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. கூட்டணி பற்றி அனைத்து கட்சிகளும் அறிவிக்கும் போது, நாங்களும் முறையாக, சரியாக அறிவிப்போம்.
அ.தி.மு.க. அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய அரசாக தமிழக அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.