சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏற்புடையது அல்ல: சினிமா துறையினர் கவனத்துடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
சர்ச்சைக்குரிய காட்சிகள் என்பது ஏற்புடையது அல்ல என்றும், சினிமா துறையினர் திரைப்படங்களை எடுப்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தை அடுத்த வேடர்புளியங்குளத்தில் அம்மா திட்ட முகாம், கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரியபுள்ளான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக விழாவில் அவர் கூறும்போது, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் உயர்தர சிகிச்சைகளை மக்கள் பெறுகிறார்கள். அதேபோல் தமிழகத்திலும் ஏழை–எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எதிர்க்கட்சிகள் எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தில் பொய் பிரசாரம் செய்து திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அதை நம்ப வேண்டாம். நிச்சயம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றார்.
முன்னதாக மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தமிழகத்தில் ஏழை–எளிய மக்களின் இதயங்களில் வாழ்ந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதும், அவரது அரசு மீதும் களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் சர்கார் திரைப்படத்தில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தோம். எனவே சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி ஜெயலலிதா பேரவை சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கிவிட்டு சர்கார் திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளதால் எங்கள் மனம் குளிர்ந்துவிட்டது.
அ.தி.மு.க. தொண்டர்களின் தெய்வமாக போற்றப்படுகின்ற ஜெயலலிதாவின் தியாகத்தை, உழைப்பை கொச்சைப்படுத்துகிற நோக்கில் இது போன்ற காட்சிகளை இனி எந்த திரைப்படத்திலும் எடுக்க வேண்டாம். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் சினிமா துறையினர் கவனத்துடன் செயல்பட வேண்டும். திரைப்படம் மக்களின் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட வேண்டும். இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்பது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.