முன்விரோதம் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்து அறுப்பு; 2 பேர் கைது


முன்விரோதம் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்து அறுப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 4:47 AM IST (Updated: 10 Nov 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தை அறுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஊரப்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் வால்மீகி தெருவை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 49). இவர் செங்கல்பட்டு பொதுப்பணித்துறையில் உள்ள நீர் ஆதார அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

முன்னதாக இவர் பொன்னேரியில் பணிபுரிந்த போது, அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் (42), பிரகாஷ் (42) ஆகிய இருவருடன் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் முரளிதரன் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டுக்குள் நுழைந்த ராஜசேகர் மற்றும் பிரகாஷ் இருவரும் முரளிதரனை மடக்கிப்பிடித்து அவரது கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த முரளிதரனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் முரளிதரனிடம் விசாரித்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அவர்கள், ராஜசேகர், பிரகாஷ், இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, முரளிதரனுடன் இருந்து வந்த முன்விரோதம் காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் ஊரப்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story