கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் வாலிபர் கொன்று புதைப்பு 3 பேரிடம் விசாரணை


கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் வாலிபர் கொன்று புதைப்பு 3 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2018 4:51 AM IST (Updated: 10 Nov 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் வாலிபர் கொன்று புதைக்கப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ராமபத்ர கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் கருணாமூர்த்தி (வயது 28). இவர் வெள்ளாத்தூரி காலனியை சேர்ந்த அரிபாபு (35) என்பவருக்கு ரூ.4 லட்சத்தை 2 ஆண்டுகளுக்கு முன்னர் கடனாக கொடுத்தார். அந்த பணத்தை அரிபாபு திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. தனது பணத்தை திருப்பி தரும்படி கருணாமூர்த்தி பலமுறை அரிபாபுவிடம் கேட்டார். அவர் பணத்தை திருப்பி தராமல் நாட்களை கடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி அரிபாபுவை சந்தித்த கருணாமூர்த்தி தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்.

அப்போது அரிபாபு அவரிடம் பேச்சு கொடுத்தபடி அவரை அழைத்து கொண்டு சென்றார். அதன்பிறகு கருணாமூர்த்தி வீடு திரும்பவில்லை என்று கூறப்படு கிறது.

இந்தநிலையில் கருணாமூர்த்தியை, அரிபாபு மற்றும் அவரது நண்பர்களான திருத்தணியை சேர்ந்த சிரஞ்ஜீவி, வெங்கடேசன், தங்கராஜ் ஆகியோர் திருத்தணியை அடுத்த சிறுகுமி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கொலை செய்து உடலை ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த கே.வி.புரம் என்ற இடத்தில் புதைத்ததாக ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆர்.கே. பேட்டை போலீசார் நேற்று அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆந்திர மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால் கருணாமூர்த்தியின் உடலை தோண்டி எடுக்காமல் போலீசார் திரும்பினர். இன்று (சனிக்கிழமை) அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், சிரஞ்ஜீவி, வெங்கடேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரி பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story