இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள சின்னசாலட்டியில் அ.திமு.க. 47–ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பவானிசாகர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசியதாவது:–
காற்று மாசுபாட்டை தவிர்க்க விரைவில் எலக்ட்ரிக் பஸ்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இடைத்தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இப்போது நடிகர்கள் திடீர் திடீர் என அரசியலில் குதித்து வருகிறார்கள். ரஜினி, கமல் இத்தனை நாட்களாக ஏன் அரசியலுக்கு வரவில்லை? திடீர் பிரவேசத்தில் முதல்–அமைச்சர் ஆகிவிட முடியுமா?
கடம்பூரில் இருந்து மல்லியம்மன் துர்க்கம் செல்ல பாதை அமைக்க வனத்துறையினரின் அனுமதிக்காக பேசி வருகிறோம். மலைப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடு, மாடுகளை அதிகம் வளர்க்கலாம். அதற்கான எல்லா வசதியும் இங்கு உள்ளது. கால்நடை வளர்ப்பால் அதிகம் லாபம் பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.