மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சாவு: சேலம் கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சாவு: சேலம் கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Nov 2018 11:50 PM GMT (Updated: 9 Nov 2018 11:50 PM GMT)

மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54). இவரது மகன் தங்கதுரை (19). இவரும், நண்பர் வெற்றிவேல் என்பவரும் கடந்த மாதம் 13-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு சென்று அங்குள்ள ஒரு கம்பெனியில் அலுமினிய வேலையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் உடல்நிலை மோசமானதால் தங்கதுரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவில் தங்கதுரை சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். பின்னர், அவர்கள் தங்கதுரையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த டவுன் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் கேட்காமல், சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தங்கதுரையை வேலைக்கு அழைத்து சென்றவர் மீதும், அங்கு வேலை செய்த கம்பெனியின் உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து தங்கதுரையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் மட்டும் கலெக்டர் ரோகிணியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், கிருஷ்ணகிரியில் உயர்மின் அழுத்த இணைப்பு செல்லும் அருகில் தங்கரையை வேலை செய்யுமாறு கூறியது தவறு ஆகும். அவரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்த காண்டிராக்டர், வேலைக்கு அழைத்து சென்றவர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விபத்து என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதை கொலை வழக்காக மாற்ற வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தங்கதுரையின் உறவினர்களிடம் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story