தனியார் சாராய ஆலை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
லிங்காரெட்டிப்பாளையத்தில் சாரா ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை செலய்பட்டு வந்தது. பின்னர் அந்த ஆலை மூடப்பட்டது. இப்போது அந்த ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் சாராய ஆலை வந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்று கூறி சாராய ஆலை திறப்பதற்கு லிங்காரெட்டிப்பாளையம், சந்தை புதுக்குப்பம், ரங்கநாதபுரம் உள்பட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி சாராய ஆலையை திறக்க பணிகள் நடைபெற்ற வருகிறது. இதை அறிந்த லிங்காரெட்டிப்பாளையம் கிராம மக்கள் தங்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார்.
இதில் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அவர்கள், சாராய ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். எதிர்ப்பை மீறி சாராய ஆலை திறக்கப்பட்டால், கிராம மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.