அரியாங்குப்பத்தில் அரிவாளை காட்டி வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
அரியாங்குப்பத்தில் அரிவாளை காட்டி பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி – கடலூர் சாலையில் அரியாங்குப்பம் புதுப்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் வீச்சரிவாள்களுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து, மிரட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் ரோந்து போலீசார் வேல்முருகன், மார்ஸ் அருள்ராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். சாலையோரம் அரிவாள்களுடன் நின்ற 2 வாலிபர்களையும் அவர்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் வி.சி.பி. நகரை சேர்ந்த பாலாஜி (வயது 23), பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்த சாலமன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.