மாவட்டத்தில் நாளை குரூப்-2 தேர்வை 27 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் கலெக்டர் ராஜாமணி தகவல்


மாவட்டத்தில் நாளை குரூப்-2 தேர்வை 27 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் கலெக்டர் ராஜாமணி தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2018 12:11 AM GMT (Updated: 10 Nov 2018 12:11 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குரூப்-2 தேர்வை 27 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வு தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:-

மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, லால்குடி, மணப்பாறை, முசிறி, ஸ்ரீரங்கம், துறையூர், திருவெறும்பூர் ஆகிய 8 வட்டங்களில் 80 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 802 பேர் நாளை குரூப்-2 தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு மையங்களை 107 முதன்மை கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் 11 பறக்கும் படை அலுவலர்களும், 107 தேர்வுக்கூட ஆய்வாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தந்த தாசில்தார்கள் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு நேரில் சென்று மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். போலீசார் சார்நிலை கருவூலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் எளிதாக தேர்வு மையங்களுக்கு சென்று வர கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். அதேபோல் மாவட்ட கருவூலம் மற்றும் சம்பந்தப்பட்ட சார்நிலை கருவூலங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு நடைபெறுவதற்கு அந்தந்த துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் ஆதித்யாசெந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, உதவி கலெக்டர்கள் அன்பழகன்(திருச்சி), ரவிச்சந்திரன்(முசிறி), பாலாஜி (லால்குடி), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணைய அலுவலர்கள், கல்வித்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, போக்குவரத்துத்துறை, கருவூலத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story