கடன் தொல்லையால் நெருக்கடி பூ கட்டும் தொழிலாளி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி


கடன் தொல்லையால் நெருக்கடி பூ கட்டும் தொழிலாளி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 10 Nov 2018 5:45 AM IST (Updated: 10 Nov 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் ஏற்பட்ட நெருக்கடியில் பூ கட்டும் தொழிலாளி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன்தெருவை சேர்ந்தவர் சிவானந்தம். இவர் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் பூ கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோகிலா(வயது 43). இவர்களுக்கு தேன்மொழி(16) என்ற மகளும், சக்திவேல்(13), ஜெயசரண்(12) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில் தேன்மொழி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சக்திவேல் 8-ம் வகுப்பும், ஜெயசரண் 7-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

கோகிலா ஸ்ரீரங்கத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று இருந்தாராம். அந்த கடன்தொகையை கட்ட முடியாமல் தவித்து வந்தார். இதனால் அவருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகமானதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை சிவானந்தம், அவருடைய மனைவி கோகிலா ஆகியோர் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக விஷத்தை வாங்கி வந்து, வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்ததுடன் கணவன், மனைவி இருவரும் குடித்தனர். சிறிதுநேரத்தில் சிவானந்தமும், கோகிலாவும் மயங்கி விழுந்தனர். குழந்தைகள் 3 பேரும் வீட்டில் இருந்து வெளியே வந்து வாந்தி எடுத்தனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீடு முழுவதும் வாந்தி எடுத்தபடி அவர்கள் மயங்கி கிடந்தனர். அவர்களுக்கு அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுபற்றி சிவானந்தத்தின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மயங்கி கிடந்த 5 பேரையும் மீட்டு, ஆட்டோக்களில் ஏற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு 5 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஜெயசரணும், தேன்மொழியும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவானந்தம், கோகிலா ஆகியோர் மயக்க நிலையில் இருப்பதால், அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் எவ்வளவு கடன்தொகை என்பது போன்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கடன் நெருக்கடி காரணமாக ஸ்ரீரங்கத்தில் பூ கட்டும் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story