நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 Nov 2018 4:00 AM IST (Updated: 10 Nov 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா வருகிற 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகர்கோவில்,

கத்தோலிக்க கிறிஸ்தவ மறை மாவட்டங்களில் ஒன்றாக கோட்டார் மறை மாவட்டம் உள்ளது. இதன் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24–ந் தேதி தொடங்கி டிசம்பர் 3–ந் தேதி நிறைவடையும்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா வருகிற 24–ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ், பங்கு தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்கு தந்தை ஆன்றனி பிரபு ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கோட்டார் ஆலய பாதுகாவலரான புனித சவேரியார் திருவிழா வருகிற 24–ந் தேதி  தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் இறைமக்கள் சார்பில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.

2–வது நாளான 25–ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு இறை இரக்கத் தூதுவர் குழுவினர் நிறைவேற்றும் அற்புத குணமளிக்கும் திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

7–ம் நாள் திருவிழாவான வருகிற 30–ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் நடைபெறும் இந்த திருப்பலியில் அவரே மறையுரையாற்றுகிறார். 8–ம் நாள் திருவிழா டிசம்பர் மாதம் 1–ந் தேதி அன்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி, இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.

9–ம் நாள் திருவிழாவான 2–ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற உள்ளது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடைபெறும். 10–ம் நாள் திருவிழா 3–ந் தேதி அன்று காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

தேர்பவனியின்போது நேர்ச்சை செலுத்தக்கூடிய பக்தர்கள் புனித சவேரியார், தேவமாதா தேர்களுக்கு பினனால் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதும் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும். திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி நடைபெறும். ஒவ்வொரு நாள் விழாவையும் பல்வேறு அமைப்பினர், துறைகளை சேர்ந்தவர்கள், பக்த சபைகள், இயக்கங்கள், சங்கங்களை சேர்ந்தவர்கள் சிறப்பிப்பார்கள்.

கொடியிறக்க நிகழ்ச்சி 8–ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். அதை தொடர்ந்து புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் ஆகியோரின் திருப்பண்ட (உடல் பாகங்கள் அடங்கிய பேழையுடன்கூடிய) பவனி, திருப்பண்டம் முத்தம் செய்தல், நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்து அனைவருக்கும் அளிக்கப்படும். விழா ஏற்பாடுகளை எங்களுடன் இணைந்து பங்கு பேரவை நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது பங்கு பேரவை துணை தலைவர் சகாய திலகராஜ், செயலாளர் அந்தோணி சவரிமுத்து, இணைச்செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் டட்லி பெர்னாண்டோ ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story