எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தை பாதுகாக்க, இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுகிறார்கள்


எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தை பாதுகாக்க, இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுகிறார்கள்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:30 AM IST (Updated: 10 Nov 2018 10:08 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தை பாதுகாக்க, இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுகிறார்கள் என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

கபிஸ்தலம்,

அ.தி.மு.க. 47–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கபிஸ்தலம் பாலக்கரையில் பாபநாசம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மோகன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். அவை தலைவர் சபேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் இணை செயலாளர் நடராஜன், ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், செல்வம், சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, பாரதிமோகன் எம்.பி., அ.தி.மு.க. பேச்சாளர் காந்திமதிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், கும்பகோணம் அரசு வக்கீல் அறிவழகன், தொழிற் சங்க செயலாளர் பாஸ்கர், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் பேசியதாவது:–


கோதுமை ஊழல், அரிசி ஊழல், பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஊழல் என பல ஊழல்களை அடுக்கடுக்காக செய்த தி.மு.க.வினர் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திவரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பார்த்து ஊழல் செய்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

தமிழகத்தை பாதுகாக்க முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு, நல்லாட்சி செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மீத்தேன் திட்டத்தை பற்றி இந்த தொகுதியை சேர்ந்த அமைச்சர், சட்டசபையில் பேசவில்லை என்று கூறி சென்றுள்ளார்.


விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. மீத்தேன் திட்டத்தை இங்கு கொண்டு வந்தால் தான் அதை எதிர்த்து பேச முடியும் என்ற நிலையில், இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறி சென்றிருக்கிறார்.

இந்த ஆட்சியை மாற்ற போகிறேன், மாற்ற போகிறேன் என தொடர்ந்து பேசி வரும் டி.டி.வி.தினகரன், அவரை நம்பி சென்ற 18 பேருக்கு என்ன செய்யப்போகிறார்? லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாகி இருக்கும் இந்த இயக்கம், நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் உள்ளவரை இருக்கும் என ஜெயலலிதா முன்பே கூறி உள்ளார். அது இன்று நிஜமாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் செல்வராஜ், முருகதாஸ், சிவகுமார், எம்.செல்வராஜ், செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, முத்து, சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் வீரமாங்குடி ஊராட்சியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கோபிநாதன் நன்றி கூறினார்.

Next Story