மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் தூய்மைப்பணி, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சுண்டேகுப்பம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுப்பது, தூய்மை பணி குறித்து கலெக்டர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை காலங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வீடு, கட்டிடங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களிடம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக சுகாதார துணை இயக்குனர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சையத் பயாஸ் அகமது, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கணேஷ், டாக்டர் சோமசுந்தரம், சுகாதார மேற்பார்வையாளர் அருள், ஊராட்சி செயலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும், டெங்கு காய்ச்சலை தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பஸ் நிலையம், பேரூராட்சி கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் பொருட்டு நகரில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், பழைய டயர், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சின்னபர்கூர், உயர்நிலைப்பள்ளி தெரு பகுதியில் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த பணியை செயல் அலுவலர் மலர்மாறன், சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வை யிட்டனர்.
ஓசூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களில் கை கழுவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பணிகளில், நகராட்சி ஆணை யாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி சுகாதாரத்துறை அலு வலர்கள், பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story