எலச்சிபாளையம் அருகே, சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கிணற்றுக்குள் மொபட் பாய்ந்தது; அ.தி.மு.க. கிளை செயலாளர் சாவு
எலச்சிபாளையம் அருகே சாலையோரம் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கிணற்றுக்குள் மொபட் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், மொபட்டை ஓட்டிச்சென்ற அ.தி.மு.க. கிளை செயலாளர் பரிதாபமாக இறந்தார்.
எலச்சிபாளையம்,
எலச்சிபாளையம் அருகே உள்ள ஆயத்தா குட்டை பகுதியில் ராமாபுரம் செல்லும் ரோட்டில், ஒடுவன் காடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 100 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிணற்றில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் கிணற்றுக்குள் ஏதோ விழுந்து பலத்த சத்தம் கேட்டது. உடனே அக்கம்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்தனர்.அப்போது கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்திருப்பதை கண்டு, கிணற்றுக்குள் பார்த்த போது யாரோ விழுந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தனர்.
குறைந்த அளவு தண்ணீரில் ஒரு மொபட்டும், கிணற்று சுற்று பாறைகளில் மோதி விழுந்ததில் அடிபட்டு ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததும் தெரிந்தது. அவரையும் மொபட்டையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து கிணற்றுக்குள் கிடந்தவர் இறந்து போயிருப்பது தெரிய வந்தது.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில், இறந்தவர், எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமம் அக்கரைப்பட்டியான் பாளையத்தை சேர்ந்த ரங்கன் (வயது 65) என்ற விவசாய கூலித்தொழிலாளி என்பதும், இவர் தெருக்கூத்து கலைஞராகவும் இருந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்துள்ளார்.
அவர் மொபட்டில், எலச்சிபாளையம் சென்று விட்டு ஒடுவன் காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கிணற்றின் பக்கவாட்டு சுவரில் மோதியதில் கிணற்றுக்குள் விழுந்ததால் பாறையில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இறந்து போன ரங்கனின், மனைவி ராசாத்தி கடந்த மாதம் தான் இறந்துள்ளார். இவர்களுக்கு சேகர் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story