நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலா? “மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
“நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது“ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
தூத்துக்குடி,
“நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது“ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
வேலுமணி பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணி தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தல் பணிக்கு நாங்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளோம். இந்த 2 தொகுதிகளும் ஜெயலலிதாவின் கோட்டை. ஓட்டப்பிடாரம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஏனென்றால் ஜெயலலிதா மக்களுக்காக அவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவர் வழியில் வந்த தற்போதைய அரசும் அந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மு.க.ஸ்டாலின் பகல் கனவு
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்ற தேர்தலும் வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஜெயலலிதா மரணம் அடைந்த போதும் கூட மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி 10 நாட்கள் இருக்காது, ஒரு மாதத்தில் போய் விடும், 3 மாதத்தில் கலைந்து விடும் என சொல்லி வந்தார். மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அவரின் கனவு ஒரு போதும் பலிக்காது. அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.
தமிழக முதல்-அமைச்சர் வலிமையாக அந்த இடத்தில் அமர்ந்து உள்ளார். அவரின் ஆட்சியை அசைக்க முடியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கண்டிப்பாக அ.தி.மு.க. வெற்றி பெறும். இதை தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.
Related Tags :
Next Story