வனப்பகுதிக்குள் செல்ல மறுக்கும் ரிவால்டோ யானை முகாமில் பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை


வனப்பகுதிக்குள் செல்ல மறுக்கும் ரிவால்டோ யானை முகாமில் பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 6:53 PM GMT)

வனப்பகுதிக்குள் செல்ல மறுக்கும் ரிவால்டோ யானையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அதை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மசினகுடி,

மசினகுடி பகுதியில் உள்ள பொதுமக்களுடனும், வனத்துறையினருடனும் நட்பாக பழகி வரும் ரிவால்டோ என்ற காட்டு யானை தற்போது வனப்பகுதிக்குள் செல்ல மறுத்து தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி வருகிறது. முன்பு இந்த யானையின் செயல் ரசிப்பதாக இருந்தாலும் நாளடைவில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.

45 வயதான அந்த ஆண் யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துதிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மாவனல்லா வனப்பகுதிக்கு வந்தது. அதனை கண்ட சிங்காரா வனத்துறையினரும், சடாபட்டி என்ற இடத்தில் வசித்து வந்த மார்க் என்ற வனவிலங்கு நல ஆர்வலரும் இணைந்து வாழைப்பழம், தர்பூசணி, கரும்பு போன்றவற்றில் காயத்தை குணப்படுத்தும் மருந்து, மாத்திரைகளை வைத்து அதற்கு சாப்பிட வழங்கினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் அந்த யானையின் துதிக்கையில் ஏற்பட்ட காயம் ஒரே ஆண்டில் குணம் அடைந்தது.

அத்துடன் அந்த யானை ரிவால்டோ என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. பழங்களை தொடர்ந்து வழங்கியதால் அந்த யானை, வனத்துறையினர் மட்டுமின்றி அனைவரிடமும் நட்பாக பழகியது. மனிதர்களை கண்டாலே அவர்களின் அருகில் வந்து சாதுவாக நின்றது. பொதுவாக காட்டு யானைகள் மனிதர்களை பார்த்தால் துரத்தி தாக்க வருவது வழக்கம். ஆனால் ரிவால்டோ யானை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருகில் செல்ல அனுமதித்தது.

இதனால் ஏராளமானோர் அந்த யானையின் அருகே சென்று தந்தங்களை தொடுவது, புகைப்படம் எடுப்பது, பழங்களை சாப்பிட வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அந்த யானையும் சில நேரங்களில் மட்டும் சாலை ஓரங்களுக்கும், குடியிருப்பு பகுதிக்கும் வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது. மற்றபடி வனப்பகுதி ஓரத்தில் நின்று இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் யானையை பார்க்க வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர்.

ஆனால் சமீப காலமாக அந்த யானை வனப்பகுதியில் இருப்பதை விட பொதுமக்களின் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே சுற்றித்திரிவது அதிகரித்து உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களிலேயே மாவனல்லா பஜார் பகுதிக்கு வரும் ரிவால்டோ யானை சாலையின் நடுவில் நடந்து செல்வது, அங்குள்ள கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை எடுத்து சாப்பிடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.மேலும் வீடுகளில் உள்ள தென்னை, வாழை, மாமரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து காட்டுக்குள் விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த யானை காட்டிற்குள் செல்வதில்லை. அவ்வாறு சென்றாலும் சில மணி நேரங்களில் மீண்டும் அதே பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் மாவனல்லா பகுதி மக்கள் அந்த யானையை கண்டாலேயே அச்சபடுகின்றனர்.

வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியில் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் காட்டு யானை ஒன்று தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலேயே சுற்றித்திரிவது அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ரிவால்டோ யானை யாரையும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் வாகனங்களை வழிமறிப்பது, வீட்டில் உள்ள மரங்களை நாசப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்ட பகுதியான மாவனல்லா பகுதியில் இந்த யானை சுற்றி திரிந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அந்த யானையை பிடித்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வனத்துறை அதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தவும் அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story