விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி? தத்ரூபமாக நடித்து காட்டிய மாணவ-மாணவிகள்


விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி? தத்ரூபமாக நடித்து காட்டிய மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:45 AM IST (Updated: 11 Nov 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், விபத்தில் சிக்கியவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

கோவை, 
எதிர்பாராத இயற்கை சீற்றம் மற்றும் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், நேற்று காலை 10.30 மணியளவில் பாலசுந்தரம் ரோட்டில் நடைபெற்றது. இதில் ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தத்ரூபமாக நடித்து காட்டினர்.

அதில், மோட்டார் சைக்கிளில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் தாறுமாறாக வருவது போலவும், எதிரே சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றது போலவும், அந்த மோட்டார் சைக்கிள், பஸ் மீது மோதுவது போலவும், பின்னர் அந்த பஸ் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி பெரிய அளவிலான விபத்து நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. இதில், ரத்த வெள்ளத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிறார். கர்ப்பிணிகள் உள்பட 21 பேர் படுகாயம் அடைகின்றனர். இந்த விபத்து குறித்து ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தகவல் செல்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்தவர்களின் கையில் சிவப்பு நிற ரிப்பன் கட்டியும், லேசான காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மஞ்சள் நிற ரிப்பன் கட்டியும், காயத்துக்கு ஏற்றாற் போல், விரைந்து முதலுதவி சிகிச்சை அளித்து, ‘ஸ்டெச்சர்’ மூலம் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போலவும் செய்து காண்பித்தனர். விபத்தில் பலியானவர் போல் நடித்தவர் கையில் கருப்பு நிற ரிப்பனையும் கட்டினர்.

நிஜமாகவே விபத்து நடந்து உள்ளதா? என்று அந்த பகுதியில் பஸ், கார், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பரிதாபப்பட்டு சென்றனர். சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வந்து பார்த்து சென்றனர். இறுதியில் இவை அனைத்தும் ஒத்திகை நிகழ்ச்சி என்று தெரிந்ததும் நிம்மதியடைந்தனர். இந்த ஒத்திகையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் மருத்துவ குழுவினர் மற்றும் மாணவ-மாணவிகளை நிர்வாக அறங்காவலர் விஜயக்குமார் பாராட்டினார்.

Next Story