ஈரோடு மாவட்டத்தில் தீவிரமடையும் கோமாரி நோய்; கால்நடை இயக்குனர் திடீர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோய் தீவிரமடைந்து வருவதால் கால்நடை இயக்குனர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
ஈரோடு,
கடந்த 2013–ம் ஆண்டு கோமாரி நோய் என்கிற கொடிய நோய் கால்நடைகளை தாக்கியது. இது ஈரோடு மாவட்டத்திலும் வேகமாக பரவியதால் ஏராளமான மாடுகள், ஆடுகளை நோய் தாக்கியது. நோய் தாக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே கால்நடைகள் உடல் எடை குறைந்து இறந்துவிட்டன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையின் தீவிர நடவடிக்கையால் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் ஆண்டுதோறும் 2 முறை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோயின் தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சத்தியமங்கலம், பவானி, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கோமாரி நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் கால்நடைகளின் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சத்தியமங்கலம் அருகே உள்ள சிவியார்பாளையத்தை சேர்ந்த விவசாயி மூர்த்தி என்கிற வெங்கடேஷ் கூறியதாவது:–
எனது தோட்டத்தில் 40 மாடுகளை வளர்த்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாட்டுக்கு திடீரென வாயில் புண் ஏற்பட்டது. உடனடியாக கால்நடை டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளித்தபோது, மாட்டை கோமாரி நோய் தாக்கி இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு மற்ற மாடுகளுக்கும் கோமாரி நோய் பரவியுள்ளது. இதனால் ஒரு கன்றுக்குட்டி மற்றும் 3 மாடுகள் இறந்துவிட்டன. மேலும், 2 மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. கோமாரி நோய்க்கு மருந்து இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுந்தப்பாடி அருகே உள்ள பாலக்காட்டூரை சேர்ந்த விவசாயி பா.மா.வெங்கடாசலபதி கூறியதாவது:–
சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, வெள்ளாங்கோவில், கள்ளிப்பட்டி, சலங்கப்பாளையம், நம்பியூர், மலையம்பாளையம், செல்லாண்டம்பாளையம், எரங்காட்டூர், துறையம்பாளையம், அறச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் கோமாரி நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. எனது வீட்டில் கோமாரி நோய் தாக்கி 2 ஆட்டுக்குட்டிகள் இறந்துவிட்டன. துறையம்பாளையத்தை சேர்ந்த சிவகாமி என்பவரது வீட்டில் ஒரு எருமை மாட்டுக்கன்று இறந்துள்ளது. எனவே தீவிரமடைந்து வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வைட்டமின் மாத்திரை வழங்கப்படுவதில்லை. இதனால் தனியார் மருந்து கடையில் ஒரு மாத்திரை ரூ.15 விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் ஞானசேகரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்து கோமாரி நோயின் பாதிப்பு குறித்து திடீர் ஆய்வு நடத்தினார்கள். மேலும் அவர்கள் சத்தியமங்கலம் அருகே கொமராபாளையத்தில் உள்ள பாபுவின் வீட்டிற்கு சென்று அவரிடம் நோய் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
விவசாயி பாபு அதிகாரிகளிடம் கூறும்போது, ‘எங்களுடைய வாழ்வாதாரமே இந்த கால்நடைகள் தான். தற்போது கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருவது பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. கோமாரி நோயை கட்டுப்படுத்த போட்ட தடுப்பூசியால் எந்தவித பயனும் இல்லை. போலி மருந்துபோல தெரிகிறது’, என்றார். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை, தாண்டாம்பாளையம், சிவியார்பாளையம் பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
இதேபோல் பவானி அருகே உள்ள மயிலம்பாடி கிராமத்தில் 10–க்கும் மேற்பட்ட கிடாரி கன்றுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டது. இங்கிருந்து பருவாச்சி, வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி போன்ற கிராமங்களுக்கும் நோய் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் ஞானசேகரன் அதிகாரிகளுடன் சென்று கோமாரி நோய் பாதித்த கால்நடைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் விவசாயிகளிடம் கூறும்போது, ‘கோமாரி நோயை தடுக்க புதிய மருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை முதன்மை செயலாளர் டாக்டர் சுந்தர்ராஜன், கூடுதல் இயக்குனர் முகமது உதுமான், மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்.கோபால்சாமி, கால்நடை டாக்டர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.