நெல்லை அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு தாசில்தார் முன்னிலையில் பரிசோதனை


நெல்லை அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு தாசில்தார் முன்னிலையில் பரிசோதனை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:00 PM GMT (Updated: 10 Nov 2018 7:40 PM GMT)

நெல்லை அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

மானூர், 

நெல்லை அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

கட்டிட தொழிலாளி கொலை

நெல்லை டவுன் அருகே உள்ள சொக்கட்டான்தோப்பு ஊரைச் சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 60). கட்டிட தொழிலாளி. அவருடைய நண்பரும், மற்றொரு கட்டிட தொழிலாளியுமான சேதுராயன்புதூரை சேர்ந்தவர் முருகன் (38). இருவருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் தங்கபாண்டியை முருகன் அரிவாளால் வெட்டி கொலை செய்து, மானூர் அருகே உள்ள கம்மாளங்குளம் சுடுகாட்டு பகுதியில் உடலை புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தங்கபாண்டி அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பணத்தையும் முருகனிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

நேற்று முன்தினம் முருகனை சுத்தமல்லி போலீசார் கம்மாளங்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தங்கபாண்டியை கொன்று புதைத்த இடத்தை அவர் அடையாளம் காட்டினார். பின்னர் அங்கு மற்றொரு இடத்தில் புதைத்து வைத்திருந்த, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும், தான் உடுத்தியிருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் முருகன் போலீசாரிடம் எடுத்துக் கொடுத்தார்.

உடல் தோண்டி எடுப்பு

பின்னர் நேற்று சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா மற்றும் போலீசார் முருகனை கம்மாளங்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நெல்லை தாசில்தார் ஆவுடைநாயகம், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் நான்சி, கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையில் தங்கபாண்டி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அங்கேயே டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதனை தொடர்ந்து தங்கபாண்டி உறவினரான சுப்பையா மகன் இசக்கி என்பவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Next Story