விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
காங்கேயம்,
காங்கேயம் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஊதியூர் அருகே பெருமாள்பாளையம் ஊராட்சி முதலிபாளையம் கிராமத்தில் தண்டபாணி மற்றும் தமயந்தி ஆகியோரின் விவசாய நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க நிலத்தை அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அங்கு திரண்டனர். அப்போது அரசு அனுமதியில்லாமலும், கலெக்டரின் உத்தரவு கடிதம் இல்லாமலும் அளவீடு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் தாசில்தார் மகேஸ்வரன் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் நிலத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.