சிவகாசி பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் தொடரும் கொள்ளை முயற்சி; போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை


சிவகாசி பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் தொடரும் கொள்ளை முயற்சி; போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 7:57 PM GMT)

சிவகாசி பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் தொடர்ந்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்து வருகிறது. இதை தவிர்க்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி,

தொழில் நகரமான சிவகாசி உட்கோட்டத்தில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களும், பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து மகளிர் போலீஸ் நிலையமும் உள்ளது. இந்த உட்கோட்டத்தில் மட்டும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த மையங்களை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சிவகாசியில் 850 பட்டாசு தொழிற்சாலைகளும், 300–க்கும் மேற்பட்ட அச்சகங்களும், 50–க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளும் உள்ளதால் அந்த தொழில் தொடர்புடையவர்கள் வெளியூர்களில் இருந்து சிவகாசிக்கு வரும் போது இந்த மையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இங்குள்ள ஏ.டி.எம் மையங்களில் எப்போதும் பணம் நிரப்பி வைக்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் சிவகாசி நாரணாபுரம்புதூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு இரவு வந்த ஒரு வாலிபர் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டார். இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் மும்மையில் உள்ள ஏ.டி.எம். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரியவந்தது. அதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு ஏ.டி.எம். மையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து எந்த புகாரும் பெறப்படவும் இல்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து மட்டும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் உள்ள 50–க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். எந்திரங்களை தற்போது போலீசார் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். அதில் இந்த ஏ.டி.எம். மைய பகுதிகளில் போலீசார் ரோந்து வந்து விட்டு சென்ற பின்பு, சிலர் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தவிர்க்க சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள போலீசார் ஏ.டி.எம். மையங்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தி இனி வரும் காலங்களில் கொள்ளை சம்பவமும், கொள்ளை முயற்சி சம்பவமும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story