டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகளின் வசூல் வேட்டையை கண்டித்து போராட்டம்; பணியாளர்கள் சங்கம் தீர்மானம்
டாஸ்மாக் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதை கண்டித்து போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
விருதுநகர்,
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசினர். பின்னர் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிகாரிகள் தங்கள் சுயநலத்துக்காக பணியாளர்களை தவறு செய்ய தூண்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். டாஸ்மாக் கடைகளில் மின் கட்டணம், கடை வாடகை முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். சரக்குகளை வாகனங்களில் இருந்து கடைகளில் இறக்கி வைக்க ஆகும் கூலி மற்றும் உடைந்து விடும் மது பாட்டில்கள், பீர் பாட்டில்கள் ஆகியவற்றுக்கான செலவினை அரசே ஏற்க வேண்டும். பணிக்கு செல்லும் அனைத்து பணியாளர்களுக்கும் பயணப்படி வழங்க வேண்டும். இறந்த பணியாளர்கள் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திக்கொண்டு அதிகாரிகளின் உடந்தையுடன் செயல்படும் அரசு அனுமதி பெறாத மதுக்கூடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் பணியாளர்கள் மீது எடுக்கும் அத்துமீறல்களை தடுத்து பணியாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளில் வசூல் வேட்டை நடத்துவதையும், பணம் தர மறுக்கும் பணியாளர்கள் மீது தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.