தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்


தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:00 AM IST (Updated: 11 Nov 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன என நெல்லையில் அரசு சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்தார்.

நெல்லை, 

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன என நெல்லையில் அரசு சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சல் தடுப்பு பணிகள்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு பணிகள் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். அரசு பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். பின்னர் அவர்கள் தடுப்பு பணியை தொடங்கி வைத்தனர்.

அப்போது கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-

பருவமழை தொடங்கியதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம், வாகன பேரணி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் குழுக்கள், குழந்தைகள் நலத்திட்ட குழுக்கள் மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துப்புரவு பணிகள்

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் நகர, கிராம பகுதிகளில் துப்புரவு பணிகள், புகை மருந்து அடிக்கும் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்குதல் ஆகிய பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அரசின் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

5 லட்சம் மாத்திரைகள்

தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் இறந்துள்ளனர். 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பன்றிக் காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளை தவிர, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கபசுர குடிநீர்

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவதை போல், பன்றிக்காய்ச்சலுக்கு இந்திய மருத்துவம் ஹோமியோபதி கழகம் அறிவுறுத்தலின் படி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 15 வகையான மூலிகை அடங்கிய இந்த குடிநீர் அரசு சித்த மருத்துவ ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர்கள் செந்தில்குமார் (நெல்லை), நளினி (சங்கரன்கோவில்), நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் கவிதா, மாநகர நகர்நல அலுவலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story