விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் திட்டங்களுக்கு கவர்னர் மாளிகை நிச்சயம் ஒப்புதல் அளிக்கும்; முதலமைச்சருக்கு, கிரண்பெடி பதில்


விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் திட்டங்களுக்கு கவர்னர் மாளிகை நிச்சயம் ஒப்புதல் அளிக்கும்; முதலமைச்சருக்கு, கிரண்பெடி பதில்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:30 AM IST (Updated: 11 Nov 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் திட்டங்களுக்கு கவர்னர் மாளிகை நிச்சயம் ஒப்புதல் அளிக்கும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்காததற்கு கவர்னர் தான் காரணம். அதற்கான கோப்பிற்கு அனுமதி வழங்க அவர் மறுக்கிறார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி பொதுநிதி விதி 230–ன்படி அனைத்து மானியங்களையும் கவர்னர் தான் ஒதுக்கீடு செய்ய முடியும். நிதி விதிகளின்படி கருத்துரு திட்டங்களை பரிந்துரைக்கும்படி அனைத்து துறைகளுக்கும் ஏற்கனவே நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்ட திட்டங்களை மட்டுமே கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்படி நானும் (கவர்னர்) அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

எந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் செயல்பட முடியும். தணிக்கையின்போது எதிர்ப்பு வரும் என்பதால் விதிகளை மீற முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் அளிப்பது மட்டுமே எனது பணி. இப்போதைய அரசு அல்லது முந்தைய அரசு விதிமுறைகளை மீறி இருந்தால் உடனடியாகவோ அல்லது எதிர்காலத்திலோ நிதி தணிக்கையாளர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் விதிமுறைகள் மீறப்பட்டது என்பதற்காக இப்போதும் அதை அனுமதிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நான் எதற்காகவும், எந்த கோப்பையும் மறுத்தது இல்லை. விதிமுறைக்கு உட்பட்டு கருத்துரு திட்டங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தியுள்ளேன். புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிதி விதிகளை முறையாக படிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு இப்போது நிதி நெருக்கடியில் உள்ளது. ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. மானிய நிதி அதிகாரம் கவர்னருக்கு உள்பட்டது என்றுதான் ஏற்கனவே உள்ள விதிகள் கூறுகின்றன. யாருடைய மானியத்தையும் கவர்னர் நிறுத்தி வைப்பது இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் திட்டங்களுக்கு கவர்னர் மாளிகை நிச்சயம் ஒப்புதல் அளிக்கும்.

இவ்வாறு இதில் அவர் கூறியுள்ளார்.


Next Story