தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் போட்டி இல்லை - நாராயணசாமி பேட்டி


தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் போட்டி இல்லை - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 8:27 PM GMT)

புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறைதண்டனை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அந்த தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.

அந்த தொகுதியில் தி.மு.க. வெற்றி வாய்ப்பினை இழந்தது. இப்போது அங்கு தேர்தலில் நிற்க தி.மு.க. நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே காங்கிரஸ் போட்டியிடவில்லை. அங்கு கூட்டணி கட்சியான தி.மு.க. நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெற நாங்கள் பாடுபடுவோம். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம்.

அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சி வெற்றிபெறும்.

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அங்கு ஜனநாயகம் தழைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story