‘சர்கார்’ பட விவகாரம்: முதல்–அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


‘சர்கார்’ பட விவகாரம்: முதல்–அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:45 AM IST (Updated: 11 Nov 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

சர்கார் பட விவகாரத்தில் புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலம் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 100–க்கும் மேற்பட்டவர்கள் நோயினால் அவதிப்படுகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு எந்த விதமான கவனமும் செலுத்தவில்லை. தற்போது கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி சாலையோரத்தில் கொட்டி வைத்துள்ளனர். அதனை அகற்றவில்லை. பெய்து வரும் மழையால் அந்த சாக்கடை கழிவுகள் ரோடு முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் போதுமான அடிப்படை வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரு படுக்கையில் 2, 3 பேர் படுக்க வைக்கப்படுகின்றனர். சுகாதார சீர்கேட்டால் அரசு பொதுமருத்துவமனை சிக்கி தவித்து வருகிறது. இங்கு போதுமான மருந்துகள் இல்லை. அரசு மருத்துவமனையில் உள்ள லிப்ட் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்யவில்லை. கழிவறைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவது இல்லை.

நிலவேம்பு குடிநீர் கொடுக்க தேவையான மருந்துகள் கூட இல்லை. மக்கள் உயிர் மீது இந்த அரசு அலட்சியமாக உள்ளது. இதனை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. இந்த பிரச்சினையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி உரிய கவனம் செலுத்த வேண்டும். அரசு உயர் அதிகாரிகள் கூட்டத்தை உடனடியாக கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும். இந்த வி‌ஷயத்தில் போர்கால அடிப்படையில் உரிய மருத்துவ வசதி, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் சட்டம்–ஒழுங்கு சீர்கெடக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை பற்றியும், அ.தி.மு.க. அரசை பற்றியும் தவறாக சித்தரிக்கும் வகையில் தேவையற்ற முறையில் அ.தி.மு.க.வின் எதிரி கட்சிகள் மற்றும் வேறு கட்சியை சேர்ந்தவர்களின் ஊதுகுழலாக விஜய் செயல்பட்டு நடித்துள்ளார். ஏழை எளிய மக்களின் நன்மைக்காக கொண்டுவந்த திட்டங்களை விமர்சனம் செய்து அரசியல்வாதிகளை தவறாக பேசி நடித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மக்கள் மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கியது சரியா? சினிமாவில் நல்ல கருத்தை பேச வேண்டும். படத்தில் புகைப்பிடித்துக் கொண்டு நடித்திருப்பது சரியா? பணம் வாங்கிக்கொண்டு நடிக்கக்கூடிய நடிகர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பற்றியும், அரசின் கொள்கைமுடிவு பற்றியும் விமர்சித்து நடித்திருப்பது தவறான ஒன்று.

புதுச்சேரி அரசும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. எனவே சர்கார் பட விவகாரம் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசை போல் புதுச்சேரி அரசும் சர்கார் பட விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story