ஐகோர்ட்டு நீதிபதி என்று கூறி மருத்துவக்கல்லூரியில் சீட் பெற்று தருவதாக ரூ.25 லட்சம் மோசடி 2 பேர் கைது
ஐகோர்ட்டு நீதிபதி என்று பொய் கூறி, மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக ரூ.25 லட்சத்தை மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பூங்கா நகர் செந்தூரப்பூ தெருவை சேர்ந்தவர் பசுபதி (வயது 45). இவரது மகன் லோகேஷ்வரன். இவரை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க கடந்த 2015-ம் ஆண்டு பசுபதி முயற்சி செய்து வந்தார்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்த முருகவேல் (45) என்பவரும், கேரள மாநிலம் மண்ணம்பேட்டா பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணமேனன்(75) என்பவரும் பெங்களூருவில் உள்ள மருத்துவக்கல்லுாரியில் சீட் வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.25 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டனர். மேலும் பாலகிருஷ்ணமேனன் தன்னை ஓய்வுபெற்ற கர்நாடக மாநில ஐகோர்ட்டு நீதிபதி என்று கூறியுள்ளார்.
ரூ.25 லட்சம் மோசடி
இதனை நம்பிய பசுபதி, இருவரிடமும் ரூ.25 லட்சத்தை கொடுத்தார். ஆனால் இருவரும் சொன்னபடி மருத்துவக்கல்லூரியில் சீட்டு பெற்றுத்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பசுபதி அவர்களை பற்றி விசாரித்தபோது, பாலகிருஷ்ணமேனன் ஓய்வுபெற்ற நீதிபதி என பொய் கூறி மருத்துவக்கல்லுாரியில் சேர்ப்பதாக கூறி ரூ.25 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
2 பேர் கைது
இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வாசுதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு முருகவேலையும், பாலகிருஷ்ணமேனனையும் தேடி வந்தனா.
இந்த நிலையில் நேற்று ராஜபாளையம் மற்றும் விழுப்புரம் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூருக்கு அழைத்து வந்தார்கள். அவர்களை திருவள்ளூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்கள்.
Related Tags :
Next Story