கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை


கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 11 Nov 2018 4:15 AM IST (Updated: 11 Nov 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையில் உள்ள சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர்கள் முதுநகர் ஏழுமலை, புதுநகர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று காலை 6.10 மணிக்கு கடலூர் மத்திய சிறைக்கு வந்து சோதனை நடத்தினர்.

அப்போது மோப்ப நாய் ஜேக்குடன் வெடிகுண்டு நிபுணர்களும் வந்திருந்தனர். அவர்கள் சிறைச்சாலைக்குள் பயன்படுத்த தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா? வெடி பொருட்கள் உள்ளதா? என தீவிர சோதனை நடத்தினர். பின்னர் சோதனை முடிந்ததும் காலை 8.10 மணிக்கு மத்திய சிறையில் இருந்து போலீசார் வெளியே வந்தனர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் நிருபர் களிடம் கூறுகையில், தற்போது நடந்தது வழக்கமான சோதனைகளில் ஒன்று தான். இந்த சோதனையில் எந்தவொரு தடை செய்யப்பட்ட பொருட்களும் கிடைக்கவில்லை. தீப்பெட்டி, பிளேடு, ஆணி உள்ளிட்ட சிறிய வகை பொருட்களே சிக்கின. அதனை பறிமுதல் செய்துள்ளோம். அதனை வைத்திருந்தவர்கள் யார்-யார்?, அவர்களுக்கு எப்படி கிடைத்தது?, யார் மூலமாக கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.



Next Story