சட்டவிரோதமாக ரெயில்வே இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து ெகாடுத்த 2 பேர் கைது சுற்றுலா செல்ல இருந்த மாணவர்கள் ஏமாற்றம்
சட்டவிரோதமாக ரெயில்வே இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
சட்டவிரோதமாக ரெயில்வே இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா செல்ல இருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ரெயில்வே இ-டிக்கெட்டுகள்
மும்பை சென்டிரல் அருகே சட்டவிரோதமாக ரெயில்வே இ- டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரெயில்வே போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்குள்ள குறிப்பிட்ட அலுவலகத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, தடை செய்யப்பட்ட மென்பொருளை பயன்படுத்தி சட்டவிரோதமாக ரெயில்வே இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 425 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஏஜெண்டான பிரசாந்த் (வயது45), லலித் (48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம்
இதில், 191 டிக்கெட்டுகள் காட்கோபரில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா செல்வதற்காக பதிவு செய்து வைத்திருந்தது ஆகும். அது சட்டவிரோதமான டிக்கெட் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், அது தெரியாமல் நேற்று மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு அந்த பள்ளி மாணவ, மாணவியர் வந்திருந்தனர். பின்னர் டிக்கெட் ரத்து செய்யப்பட்டது அறிந்ததும், அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story