மெட்ரோ ரெயிலில் வெடிகுண்டு பீதி கிளப்பிய 2 பேர் கைது போலீஸ் விசாரணை
மெட்ரோ ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பீதியை கிளப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மெட்ரோ ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பீதியை கிளப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு
மும்பையில் புறநகர் காட்கோபர் - வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் வெர்சோவாவில் இருந்து ஒரு மெட்ரோ ரெயில் காட்கோபர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் அந்தேரி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து நின்ற போது, பயணிகள் 2 பேர் திடீரென மெட்ரோ ரெயிலில் வெடிகுண்டுகள் இருப்பதாக அலறி கொண்டு கீழே இறங்கினார்கள்.
இதை கேட்டு மற்ற பயணிகளும் பதறி அடித்து கொண்டு இறங்கினார்கள்.
2 பேர் கைது
இதுபற்றி அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த மெட்ரோ ரெயிலில் சோதனை நடத்தினர். மோப்பநாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு இருப்பதாக கூறியது பொய் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மெட்ரோ ரெயில் நிலைய பாதுகாவலர்கள் வெடிகுண்டு இருப்பதாக பீதியை கிளப்பிய பயணிகள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் சாந்திவிலியை சேர்ந்த யோகேந்திர பிரசாத் (வயது45), சம்புநாத் (56) என்பதும், தச்சு தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. என்ன காரணத்துக்காக மெட்ரோ ரெயிலில் வெடிகுண்டு பீதியை கிளப்பினர் என்பதை கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story