திண்டுக்கல்லில் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு - சுகாதார பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு


திண்டுக்கல்லில் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு - சுகாதார பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு
x
தினத்தந்தி 11 Nov 2018 5:00 AM IST (Updated: 11 Nov 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

திண்டுக்கல்,

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். இதையடுத்து அவர், திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணை, ரூ.20 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் அணை, உறைகிணறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது காமராஜர் அணையின் கொள்ளளவு, நீர்இருப்பு, மக்களுக்கு வினியோகம் செய்வதற்கு தினமும் எடுக்கப்படும் நீரின் அளவு குறித்து கேட்டறிந்தார். மேலும் குடிநீரை குளோரினேசன் செய்த பின்னரே மக்களுக்கு வழங்க வேண்டும். அணைக்கு வரும் பாதையை சீரமைக்க வேண்டும். அணை பகுதியில் பூங்கா அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கட்டப்படும் பூங்காவை பார்வையிட்டார். அப்போது பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அறிவுரை வழங்கினார்.

அதன்பின்னர் திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் ரூ.5 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார். பஸ்நிலைய விரிவாக்க பணிகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் பஸ்நிலைய வளாகத்தில் இருக்கும் பொதுக்கழிப்பறைக்குள் சென்று முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா? என்று பார்வையிட்டார். பொதுக்கழிப்பறைகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும், கழிப்பறையில் சேதமடைந்த பகுதிகளை அகற்றி, புதிதாக கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதேபோல் பஸ்நிலையத்தில் இருக்கும் உணவகங்களில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் மூலம் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். பஸ்நிலைய கட்டிடங்களை சரியாக பராமரிப்பதோடு, மின்விளக்குகள் பொருத்தும்படி உத்தரவிட்டார். பின்னர் மரியநாதபுரத்தில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதையடுத்து முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது திண்டுக்கல் நகரின் சுகாதாரம் குறித்து அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் சுகாதார பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



Next Story