அந்தியூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி
அந்தியூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பரிதாபமாக பலியானது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள ஓலகடம் பகுதியில் 9 மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:–
கொளந்தபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி தமிழரசி (22). இவர்களுடைய மகள்கள் இந்துமதி (3), நைனிகா (9 மாதம்).
இந்தநிலையில் நைனிகாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவளை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தை அழுதது. இதைத்தொடர்ந்து நைனிகாவை மீண்டும் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள அதே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லாததால் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்கள், நீங்கள் முதலில் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கே கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து குழந்தையை முதலில் சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்துவிட்டு நைனிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதை கேட்டதும் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் கொளத்துப்பாளையம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘குழந்தை மர்ம காய்ச்சலால் இறந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கிடையே மாரிமுத்துவின் மற்றொரு குழந்தை இந்துமதியும் நேற்று காலை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. உடனே இந்துமதியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.