ரூ.2 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்: வாகன பழுது பார்க்கும் மைய உரிமையாளர் கைது 2 பேருக்கு வலைவீச்சு


ரூ.2 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்: வாகன பழுது பார்க்கும் மைய உரிமையாளர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 2:18 PM GMT)

ரூ.2 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வாகன பழுது பார்க்கும் மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர்,

வேலூரை அடுத்த சாத்துமதுரை பஸ் நிறுத்தம் அருகே கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மையம் உள்ளது. இதனை கணியம்பாடியை அடுத்த குருமப்பாளையத்தை சேர்ந்த காந்தி மகன் இந்தியா (வயது 30) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வேனில் சட்ட விரோதமாக பொருட்கள் இருப்பதாக வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29–ந் தேதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மினிவேன் கூண்டின் பூட்டை உடைத்து சோதனை செய்ததில் செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில், ரூ.2 கோடி மதிப்புடைய 90 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அதை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகள் மினிவேனுடன் வேலூர் வனச்சரகர் கோவிந்தராஜிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக வேலூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மினிவேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் செம்மரக்கட்டை கடத்தலில் அந்த வாகன பழுதுபார்க்கும் மைய உரிமையாளர் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த இந்தியாவை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொண்டோம். அதில் வாகனம் பழுது பார்க்கும் மைய உரிமையாளர் இந்தியா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கைது செய்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்பு கொண்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சோழவரம் பகுதியை சேர்ந்த ஒருவரையும், செம்மரக்கட்டை கடத்தலுக்கு பயன்படுத்திய வேனின் உரிமையாளரான ஓசூர் சூளகிரியை சேர்ந்த பெருமாள் என்பவரையும் தேடி வருகிறோம்’’ என்றனர்.


Next Story