9 முதல் 12-ம் வகுப்புவரை அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடங்கள் அடுத்த மாதத்திற்குள்(டிசம்பர்) கணினி மயமாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் 2017-18-ம் கல்வியாண்டில் நடந்த அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டி விருது மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் விழா வி.ஐ.டி. மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நேற்று வி.ஐ.டி.யில் நடந்தது.
விழாவுக்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் தொகுதி சு.ரவி எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். அமைச்சர் நிலோபர் கபில், கலெக்டர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற 59 பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி விருது மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை வருடத்திற்கு ஒருமுறை அழைத்து பேசவேண்டும் என்று வேந்தர் விசுவநாதன் கூறினார். முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று அடுத்த வாரத்திற்குள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தென்கொரியாவில் 4 வருடம் ஆசிரியர் பயிற்சியளிக்கப்படுவதாகவும், ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இங்கே நமது மாவட்ட ஆட்சித்தலைவர் இருக்கிறார். அவர் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம்தான் சம்பளம் வாங்குகிறார். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர் ஓய்வுபெறும் காலத்தில் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். இதை கூறுவதால் தவறாக நினைக்கக்கூடாது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் கல்வியில் 27-வது இடத்தில் இருக்கிறது. 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் இங்கு கவுரவிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கு என்னென்ன இடர்பாடுகள் உள்ளது என்று தெரியும். வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் பெற்றோர்கள் வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்வதால் அவர்களால் குழந்தைகளை நேரடியாக கவனிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா இல்லையா என்பது தெரியாது.
இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் பள்ளிகளில் ‘பயோமெட்ரிக்’ முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வந்தார்களா என்பது குறித்து பெற்றோருக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பப்படும். தற்போது இந்த திட்டம் 50 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.
671 பள்ளிகளில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ‘நீட்’ பயிற்சிக்கு 5 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்ந்திருந்தனர். இந்த ஆண்டு 20 ஆயிரம்பேர் சேர்ந்துள்ளனர். 3 ஆயிரத்து 500 பேர் டாக்டர்களாக செல்ல வாய்ப்புள்ளது. அதேபோன்று பிளஸ்-2 முடித்தவுடன் வேலைக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு 5 ஆயிரம் ஆடிட்டர்கள் மூலம் இலவசமாக சி.ஏ. பயிற்சியளிக்கப்பட உள்ளது.
12 வருடங்களுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கும். நடுநிலை பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் நடத்தப்படும் பாடங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படும்.
அடுத்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் சீருடைகள் மாற்றப்படுகிறது. ஆண்டுக்கு 3 முறை பெற்றோர்களை அழைத்து பேசவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இருக்கும் சிக்கலை போக்க 10 ஆயிரம் வாகனங்கள் வாங்கப்படுகிறது. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் பயன்படுத்தப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடங்கப்படும். அதேபோன்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரையில் கணினி மயமாக்கப்படும். இதன் மூலம் வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை செல்போன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில் “இந்த ஆண்டுக்குள் 82 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் நிதி உதவி பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் தேவையான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள், சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை” என்றார்.
முன்னதாக தலைமை தாங்கி பேசிய வேந்தர் ஜி.விசுவநாதன், “தேர்ச்சி விகிதத்தில் கடைசி 3 இடத்திற்கு போட்டியிடுபவர்களில் நாமும் ஒருவராக இருக்கிறோம். கல்விதான் நாட்டை மாற்றும் சக்தி படைத்தது. உயர் கல்வியில் அரசு தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. கல்விக் கூடங்கள் வெற்றியடைய நல்ல ஆசிரியர்கள் தேவை. தென்கொரியாவில் 4 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சியளிக்கப்படுகிறது. இங்கு இப்போதுதான் 2 வருடம் பயிற்சியளிக்கப்படுகிறது. அதுவும் கல்லூரிக்கு செல்லாமலே பட்டங்கள் வாங்கப்படுகிறது.
இதனால் கல்வியில் தரம் இருக்காது. எனவே பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவேண்டும். நாம் எதை முடிவுசெய்தாலும் தேர்தலை வைத்துதான் முடிவு செய்கிறோம். இதை மாற்றவேண்டும். தேர்தலில் வசூல், வினியோகம் என்றிருப்பதை மாற்றி கல்வியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் லோகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story