மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை ஜி.கே.வாசன் பேட்டி


மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2018 4:30 AM IST (Updated: 11 Nov 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என மன்னார்குடியில் ஜி.கே.வாசன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடியில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திரைப்படங்களை திரைப்படங்களாகவே பார்க்க வேண்டும். வரம்பு மீறும் திரைப்படங்களை சட்ட ரீதியாக அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர பொதுமக்களையும், ரசிகர்களையும் அச்சுறுத்த கூடாது. இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ள நிகழ்வாகும். இது ஈழத்தமிழர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இலங்கை அரசின் சூழலை இந்திய அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி அரசும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும் விவசாயிகளுக்கு எந்த சலுகைகளையும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகையை கூட சரியாக வழங்கவில்லை.


பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் மற்றும் பெரிய முதலாளிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர். மயிலாடுதுறை அருகே உள்ள வேட்டைக்குடி கிராமத்தை சேர்ந்த மாணவி சுபானு அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மத்திய, மாநில அரசுகள் சிறு–நகர மற்றும் கிராம பகுதியிலிருந்து சாதனை படைக்கும் மாணவ–மாணவிகளை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சாதனை படைத்த மாணவிக்கு த.மா.கா. சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். வடுவூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடையை அகற்றவேண்டும் என்று த.மா.கா. சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டு இருப்பதை கண்டிக்கிறேன். பல மாநிலங்களில் நடைபெறும் தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.


தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது போல மேலும் காலியான 2 தொகுதி சட்டமன்ற தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. கஜா புயல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு பாதுகாப்பு, நோய்தடுப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோல அனைத்து நகரங்கள், கிராமங்களில், தேவையான மருத்துவர்களையும், மருத்துவ வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். சத்துணவு, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவர்களின் குறையை போக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மாநில செயலாளர் சாதிக், முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கராஜன், முன்னாள் நகரசபை தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்குபாண்டியன், நகர தலைவர் நடனபதி, வக்கீல் ராமகிருஷ்ணன், வட்டார தலைவர் முனியப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story