உரம் விற்பனையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்; கலெக்டர் ஆலோசனை
உரம் விற்பனையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனை வழங்கி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உரம் விற்பனையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சில்லரை மற்றும் மொத்த உர விற்பணையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, உதவி இயக்குனர் சேக் அப்துல்லா, அலுவலர் நாகராஜன் மற்றும் ஸ்பிக், கோத்தாரி போன்ற உர உற்பத்தியாளர் பிரதிநிதிகள் மற்றும் உர விற்பனை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் தற்போது வரை 490.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் மட்டும் 294.19 மி.மீ. கிடைக்கப்பெற்ற மழையினை பயன்படுத்தி 1 லட்சம் எக்டேரில் நெற்பயிரும், 2 ஆயிரத்து 955 எக்டேரில் சிறுதானிய பயிர்களும், 2 ஆயிரத்து 239 எக்டேரில் பயறுவகை பயிர்களும், 233 எக்டேரில் எண்ணெய் வித்து பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள உரங்களை அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் உரக்கடைகளில் உரம் இருப்பு உர விலை விவரம் அடங்கிய தகவல் பலகை விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும். விற்பனை முனை எந்திரம் மூலம் மட்டுமே உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். இதனை கண்காணிக்க மாவட்ட அளவில் 4 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து உர விற்பனை நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள்.
அனைத்து உர விற்பனை நிலையங்களும் விவசாயிகளுக்கு சிறந்த விரிவாக்க பணிகளை செயல்படுத்தும் மையங்களாக செயல்பட வேண்டும். வேளாண்மை துறை அலுவலர்களால் பரிந்துரைக்கப்படும் உர அளவை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதனால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நவம்பர் மாதத்திற்கு தேவையான ரசாயன உரங்கள் சம்பந்தப்பட்ட உர உற்பத்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு தனியார் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.