விருதுநகர் மாவட்டத்தில் இருமல் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தல் - கலெக்டர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர்,
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு குறித்த அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் கூறியதாவது:–
பன்றிக்காய்ச்சல் எச்சில் மற்றும் சளித் துளிகள் மூலம் 1 மீட்டர் தூரத்துக்குள் பரவக்கூடியது. நேரிடையாக பன்றிகள் மூலம் பரவுவது இல்லை. பன்றிக்காய்ச்சல் நோயானது 20 சதவீதம் காற்றின் மூலமும், 80 சதவீதம் கைகளினாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. எனவே, தனிமனிதனின் கை கழுவும் பழக்கம் மற்றும் பாதிக்கப்பட்டோர் இருமும் போதும், தும்மும் போதும் முக உறை பயன்படுத்துதல் போன்ற சுகாதாரப் பழக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த நோய் பரவுதலை தடுக்க முடியும்.
பஸ் நிலையங்கள், பணிமனைகளில் உள்ள பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களான அரசு, தனியார் மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள இருக்கைகள், மேஜைகள், கதவுகள், கைப்பிடிகள், திருகு குழாய்கள், நாற்காலிகள், சுவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள கதவுகள், கைப்பிடிகள், ஜன்னல்கள், இருக்கைகள், மேஜைகள், கரும்பலகைகள், கழிவறை கதவுகள், சுவர்கள் ஆகிய இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கிருமிகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ், ரெயில், மார்க்கெட், மருத்துவமனை, சினிமா தியேட்டர் போன்ற கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மிதமான சுடுநீருடன் உப்புக்கரைசலை பயன்படுத்தி ஓரிரு நிமிடங்கள் வாய் கொப்பளித்து தொண்டையையும், தூய்மையான நீரினால் மூக்கு துவாரங்கள், கண்கள் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
வெதுவெதுப்பான குடிநீரை அடிக்கடி பருகவும், குளிர்சாதன பெட்டிகளை வாரம் ஒருமுறை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், குறும்படங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் வெளியில் சென்று பின்னர் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக கை, கால்களை கழுவும் பழக்கத்தையும், தினமும் 10 முறையாவது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தையும் கடைபிடித்து, தொற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.