ஆசனூர் அருகே குட்டியுடன் ரோட்டை கடந்த யானைகள் காரை துரத்தியதால் பரபரப்பு
ஆசனூர் அருகே குட்டியுடன் ரோட்டை கடந்த யானைகள் காரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் மழை பெய்து உள்ளதால் ஆசனூர் மலைப்பகுதியில் செடி, கொடிகள் முளைத்து மரங்கள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் யானைகள் செடி, கொடிகளை தின்பதற்காக அடிக்கடி வனப்பகுதியில் உள்ள ரோட்டோரம் உலா வருகின்றன. மேலும் இந்த யானைகள் அவ்வப்போது ரோட்டை கடக்கின்றன. அவ்வாறு கடக்கும் யானைகளை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் 3 யானைகள் ஒரு குட்டியுடன் சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் செல்லும் ரோட்டை கடக்க முயன்றன. அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று யானைகளை கடக்க முயற்சித்தது. இதில் ஒரு யானை பிளிறியபடி திடீரென காரை துரத்த தொடங்கியது. இதனால் அதில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கத்த தொடங்கினர். பின்னர் அந்த யானை சிறிது நேரம் ரோட்டில் நின்றுவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.