மொடக்குறிச்சி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு ஒருவர் கைது
மொடக்குறிச்சி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி அருகே உள்ள முத்தையன்வலசு பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 65). விவசாயி. அவருடைய மனைவி ருக்குமணி (60). இவர் நேற்று மாலை எழுமாத்தூரில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து மர்மநபர்கள் 3 பேர் மோட்டார்சைக்கிளில் சென்றனர்.
முத்தையன் வலசு அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்றபோது திடீரென 3 பேரும் மொபட்டை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் மோட்டார்சைக்கிளில் இருந்து ஒருவன் இறங்கி ருக்குமணியை நோக்கி சென்றான். மற்ற 2 பேரும் மோட்டார்சைக்கிளில் தயார் நிலையில் இருந்தனர். ருக்குமணியிடம் சென்ற நபர் அவரிடம், கத்தியை காட்டி பணத்தை தருமாறு மிரட்டினான். இதனால் பயந்து போன அவர், தன்னிடம் இருந்த ரூ.280–யை அவனிடம் கொடுத்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்தார்கள். உடனே மோட்டார்சைக்கிளில் இருந்த 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பணத்தை பறித்தவனை மட்டும் கையும், களவுமாக பொதுமக்கள் பிடித்தனர். பிடிபட்டவரை மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த காளிதாஸ் என்பதும், தப்பி ஓடிய 2 பேரும் வெண்டிபாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மகன் மேகநாதன், மன்சூரின் மகன் பாண்டி என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காளிதாசிடம் இருந்து ரூ.280–யை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.