வீடு புகுந்து நகை– பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை
ஈரோடு அருகே வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்ற முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு அருகே 46 புதூர் நொச்சிக்காட்டுவலசு பிரியாதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது 48). இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் தோல் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெசிமாபேகம் (45). இவர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பெண்கள் அழகு நிலையம் வைத்து உள்ளார். இவர்களுடைய ஒரே மகன் அப்துல்ரகுமான் (26) மருத்துவ தேர்வு எழுத டெல்லி சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை ஜாபர்பாபு சங்ககிரிக்கு சென்றார். ஜெசிமா பேகம் அழகு நிலையத்திற்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது முகமூடி கொள்ளையர்கள் 8 பேர் வீட்டிற்குள் புகுந்து ஜெசிமாபேகத்தின் கை–கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் அவர்கள் 40 பவுன் நகையையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு 8 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கொள்ளை கும்பலை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சரஸ்வதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், ஜெசிமாபேகத்திடம் சம்பவம் நடந்த விவரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கொள்ளை கும்பல் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா? ஏற்கனவே கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்களா? அதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர்.